யோசேப்பு எனும் இளைஞன்

(தொடக்கநூல் 41:37-46)

திருமறையில் தொடக்கநூலில் உள்ள மொத்தம் 50 அதிகாரங்களில் 12 அதிகாரங்கள் யோசேப்பு தொடர்புடையதாக உள்ளன. இது இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் யோசேப்பு எத்தனை முக்கியமானவர் என்பதை நமக்குக் காட்டுகிறது. இஸ்ரவேல் மக்களின் முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபு என்பவருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் 11 வதாகப் பிறந்தவர்தான் யோசேப்பு. தமது முதிர்வயதில் பிறந்தவரான யோசேப்பின் மீது யாக்கோபு அதிகம் அன்பு கொண்டிருந்தார்.

இது யோசேப்பின் மூத்த சகோதரர்களுக்கு எரிச்சலை மூட்டியதோடு, யோசேப்பின் மீது கோபம் கொள்ளவும் செய்தது. இதன் விளைவாக, ஒரு சமயம் அவர்கள் வீட்டை விட்டு தூரத்தில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த நேரம் தங்களை சந்திக்க வந்த யோசேப்புவைக் கொல்ல நினைத்து. பின்னர், மனது மாறி அவரை எகிப்து நாட்டு வியாபாரிகளுக்கு அடிமையாக விற்றனர். இப்படி அவர் அடிமையாக எகிப்து சென்றடைந்த போது அவருக்கு வயது 17. சிறுவனாக நுழைந்து இளைஞரான யோசேப்புவின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல் ஏற்பட்டது. அது ஒரு பெண்ணின் உருவில் வந்தது.

எகிப்தில் யோசேப்பு எகிப்து அரசர் பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவரும் படைத்தலைவருமான போத்திபார் என்பவர் வீட்டில் அடிமையாகப் பணியில் சேர்ந்தார். ஆண்டவர் யோசேப்புடன் இருந்ததால், வெகு விரைவில் அவருடைய எஜமான் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தார். யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் அவ்வீட்டிற்கு ஆசி வழங்கினார்.

யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார். அத்துடன் திறமையோடும் நேர்மையுடனும் பணிபுரிந்தார். போத்திபாரின் மனைவி யோசேப்பினால் கவரப்பட்டு அவரது அன்புக்காகவும் உறவுக்காகவும் மிகவும் ஏங்கினார். அவரது ஆசைக்கு இணங்குமாறு யோசேப்புவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஆனால், யோசேப்பு அதற்கு இணங்கவில்லை. இது கடவுளுக்கு எதிரான பாவம் என்று கூறி விலகி நின்றார். இவ்வாறிருக்க ஒரு நாள் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போத்திபாரின் மனைவி மட்டும் இருந்த நேரம். வேலை நிமித்தமாக யோசேப்பு வீட்டுக்குள் சென்றார். அப்போது அப்பெண் யோசேப்புவை தனது ஆசைக்கு இணங்குமாறு அவரது மேலாடையைப் பற்றி இழுத்தார். யோசேப்போ தனது மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார். எங்கே யோசேப்பு தன்னைக் காட்டிக்கொடுத்து, அவமானத்திற்கு ஆளாக்கி விடுவாரோ என்கிற அச்சத்தில், அப்பெண் யோசேப்புவின் மீது பழியைச் சுமத்தினார்.

இதன் விளைவாக யோசேப்பு அரச கைதிகள் காவலில் வைக்கப்படும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் சிறையிலடைக்கப்பட்ட அரசு உயர் அதிகாரிகளை சந்தித்தார். அவர்களின் கனவுகளுக்கு விளக்கமளித்தார். ஆண்டவர் யோசேப்புடன் இருந்ததால், சிறைச்சாலையிலும் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். ஒரு சமயம் எகிப்து அரசர் பார்வோனின் கனவுக்கு விளக்கமளிக்க யோசேப்பு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அரசரின் கனவுக்கு அவர் கூறிய விளக்கமும் வழிகாட்டலும் ஏற்கப்பட்டதோடு, அரசர் அரண்மனையின் முழு பொறுப்பையும் யோசேப்புக்கு அளித்ததுடன் எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினார். இவ்வாறு யோசேப்பு எகிப்து அரசருக்கு அடுத்த நிலையில் பதவியில் அமர்ந்த போது அவருக்கு வயது 30 மட்டுமே. யோசேப்பு இளைஞர்கள் அனைவருக்கும் நல் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அதற்குக் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறலாம்.

1) அவர் கடவுளுக்குப் பயந்தவர்.
2) ஒழுக்கம் மிகுந்தவர்.
3) நேர்மையானவர்.
4) பொறுப்புடையவர்.
5) திறமை வாய்ந்தவர்.
6) மதி நுட்பமுடையவர்.
7) நிர்வாகத் திறன் கொண்டவர்.
8) பொறுமையுடையவர்.
9) மன்னிக்கும் மனப்பான்மையுடையவர்.
10) கடவுளின் அருளைப் பெற்றவர்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

சிதைவிலும் அழகு