தமிழ்நாட்டில் வகுக்கும் திட்டங்கள்தான் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது: ஜோலார்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வேலூர்: ‘தமிழ்நாட்டில் வகுக்கும் திட்டங்கள் தான், இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது’ என்று ஜோலார்பேட்டை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை வேலூர் வந்தார். ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி பகுதியில் அரசு சார்பில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 26 மாதங்கள் ஆகிறது. 26 மாதத்தில் 260 திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 14,500 பயனாளிகளுக்கு ரூ.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைக்க திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் இருந்து வகுக்கப்படும் திட்டங்கள்தான் இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்திற்கு பெரிய சிப்காட் தொழிற்சாலை அமைக்க, முதல்வரிடம் தெரிவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* தங்கம் வென்ற மாணவிகள் கோரிக்கை
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த வர்ஷினி(18), வெள்ளிபதக்கம் வென்ற அக்சிதா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதில் வேலூரில் 200 மீட்டர் நீளமுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை அமைத்துத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Related posts

கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமின் மனு மீது நாளை உத்தரவு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு