ஜோலார்பேட்டை ஆதிதிராவிடர் அரசு விடுதியில் பிறந்த நாள் மாணவனுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கிய கலெக்டர்

*மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் தங்கும் விடுதியில் 46 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதிய உணவு சாப்பிட வந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனை கண்ட கலெக்டர் மீதமுள்ள மாணவர்கள் எங்கே என கேட்டார். அதில், மீதமுள்ள மாணவர்கள் பள்ளியில் வழங்கக்கூடிய உணவினை சாப்பிட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், விடுதியில் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட வெஜிடபிள் பிரியாணியை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் தர்ப்பகராஜ் சாப்பிட்டார். அப்போது, காய்கறிகள் குறைவாக உள்ளதை கண்டு, நாள் தோறும் வழங்கப்படும் உணவுகள் இப்படி தான் வழங்கப்படுகிறதா?, வார அட்டவணைப்படி அரசு அறிவித்துள்ளவாறு என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்று மாணவர்களிடம் கேட்டார்.

அதில், திங்களன்று சாம்பார் சாதமும், செவ்வாய் அன்று வெஜிடபிள் பிரியாணி, புதன் அன்று சிக்கன் சாதமும், வியாழன் அன்று தக்காளி சாதமும், வெள்ளி அன்று காரக் குழம்பு, சனிக்கிழமை அன்று எலுமிச்சை சாதம், தயிர் சாதம், ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது என்றும், இத்துடன் நாள்தோறும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.மேலும், சமையலுக்காக காய்கறிகள் 5.5 கிலோ வாங்கியதாக ஆவணத்தில் தெரியப்படுத்தி உள்ளது. ஆனால், தாங்கள் வழங்கிய உணவில் காய்கறிகள் ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது என்று சம்மந்தப்பட்ட உணவு தயாரிப்பாளரிடம் கேட்டார். அதற்கு அவர் மவுனமாக இருந்ததை கண்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து, கூடிய விரைவில் இதே போன்று ஆய்விற்கு வருவேன். ஏதேனும் இது போன்ற குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என எச்சரித்தார்.

தொடர்ந்து மாணவர்களை தனியாக அழைத்து, உங்களுக்கு என்னென்ன குறைபாடுகள் உள்ளது என்று கேட்டபோது, தண்ணீர் சரியாக வருவதில்லை எனவும், இதனால் கழிவறைகள் தூய்மையாக வைத்துக்கொள்ள இயலவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வாலிபால் கட்டமைப்பு அமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், விடுதியில் பயிலும் காளியப்பன் என்ற மாணவன் வண்ணநிற உடையில் இருந்ததால், இதை கண்ட கலெக்டர் என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் இன்று என்னுடைய பிறந்தாள் என தெரிவித்தார். உடனடியாக கலெக்டர் உதவியாளரிடம் பணம் கொடுத்து சாக்லேட் வாங்கிவர சொல்லி, அந்த மாணவனுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு அந்த மாணவனும் நன்றி தெரிவித்துக்கொண்டு கலெக்டர் வழங்கிய சாக்லேட்டுகளை உடனிருந்த மாணவர்களுக்கும் பகிர்ந்தார். அப்போது அனைவரும் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை அறிவிப்பு பலகையில் பதிவிட வேண்டும் என்று தெரிவித்து, மாணவர் விடுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார். மேலும், அனைத்து விடுதிகளிலும் தொலைபேசி எண் இணைக்கப்பட்டதற்கான புகைப்படத்தினை என்னுடைய வாட்ஸ் அப்க்கு அனுப்பப்பட வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு