வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ராயப்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர், தனது மகன் ஹரீசுக்கு அரசு வேலை தேடி வந்தார். இது தொடர்பாக, தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனது நண்பர் நெப்போலியனை, கடந்த 2021ல் அணுகினார். அவர், இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவரை கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது புகழேந்தி, தான் இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரியாக பணிபுரிவதாகவும், இந்த துறையில் கிளர்க் வேலை வாங்கி தருவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என கண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய கண்ணன், தனது மகனுக்கு வேலை வாங்கித்தருமாறு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி வேலை வாங்கி தராமல் புகழேந்தி இழுத்தடித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த கண்ணன் புகழேந்தி குறித்து விசாரித்தபோது, அவர் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கண்ணன் தான் கொடுத்த பணத்தை கேட்டும், அவர் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கண்ணன் நேற்று முன்தினம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில், கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் புகழேந்தி மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்