ஜில்லுனு ஒரு வெற்றித் தம்பதி!

நன்றி குங்குமம் தோழி

‘‘இன்னும் கொஞ்ச நேரத்துல ஐஸ் வண்டி மணி சத்தம் கேட்கும். போய் ரெண்டு குச்சி ஐஸ் வாங்கிட்டு வரலாம். இப்ப அதுல சிறுதானிய குல்பி ஐஸ் வேற விக்கறாங்களாம். இன்னிக்கு சாப்பிட்டுப் பார்த்துடுவோம்”… ‘‘என்ன இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி… வெயில் போயாச்சு… இன்னும் ஐஸ் திங்கற ஆசை போகலையா? ஐஸ் சாப்பிட எந்தக் காலமா இருந்தா என்ன? அதுலயும் இந்த ஐஸ் சாப்பிட்டா உடம்புக்கு ஒண்ணும் ஆகாது…” சேலம் பக்கம் வந்தால் இப்படி ஒரு உரையாடலைக் கேட்கலாம்.

அன்றிலிருந்து இன்று வரை மழையோ வெயிலோ இடைவிடாமல் சாலையில் மணி அடித்து விற்பனைக்கு வருவது ஸ்டேட் எக்ஸ்பிரஸ் ஐஸ்தான் என்று சேலம் மக்களுக்குத் தெரியும். காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம். ஆனால் பொன்விழா காணும் இந்த ஐஸ் நிறுவனத்தின் வண்டிகளும் அதில் விற்கப்படும் ஐஸ்களின் தரமும் சுவையும் இன்னும் மாறாதது உண்மையில் ஆச்சரியமான விஷயம்.

சமீபத்தில் சேலத்தில் நடந்த செட்டிநாடு சந்தை எனும் நிகழ்வில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது இவர்களின் சிறுதானிய குல்பி ஐஸ். சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அவர்களின் வீடு, இந்த குச்சி ஐஸ் போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது. வீட்டின் கீழே தான் இவர்களின் ஐஸ் பேக்டரி. இந்த ஐஸ் பேக்டரிக்கு சொந்தமானவர்கள் லலிதா, ராமநாதன் தம்பதியினர்.

‘‘எங்க சொந்த ஊர் தேவக்கோட்டை. நான் லல்லியை (மனைவி லலிதா) கல்யாணம் பண்ணியதே பெரிய கிஃப்ட்தான். நான் நல்லா படிச்சா அவர் மகளை எனக்கு கல்யாணம் செய்து வைப்பதாக என் தாய்மாமன் சொன்னார். அதே போல 1973ல் எங்க திருமணம் நடந்தது. இதோ இன்று வரை என்னோட வெற்றிகளுக்கு எல்லாம் உறுதுணையாக இருந்து வருவது இவர்தான். எனக்கு ஐஸ் தொழில் அமைந்ததும் சுவாரஸ்யம்தான். மதுரை ஐஸ் கம்பெனிக்கு மேனேஜராகப் பணியில் இருந்து வந்தேன்.

ஆனால் இடையில் என் முதலாளி அந்த ஐஸ் கம்பெனியை விற்க முடிவு செய்தார். எனக்கோ அந்த நிறுவனத்தை அவர் வேறு யாரிடமோ கொடுப்பதைவிட அதை நாமே ஏன் வாங்கிக் கொள்ளக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. நான் நான்கு பேருடன் சேர்ந்து கூட்டாகத்தான் இந்த ஐஸ் நிறுவனத்தை வாங்கினோம். அதன் பிறகு அதனை சேலத்தில் இருந்து செயல்படுத்த ஆரம்பித்தோம். இந்த ஆண்டு எங்களுக்கு பொன்விழா ஆண்டு.

முதலில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்த ஐஸ் நிறுவனத்தை வாங்கினேன். ஆனால் அதில் நிறைய சிக்கல்களை சந்தித்தேன். இதில் ஐஸ் தயாரிக்கும் இயந்திரம் நல்லா வேலை செய்யணும். அதன் பிறகு மழைக் காலத்தில் பெரிய அளவில் விற்பனை இருக்காது. மிஷினில் சின்ன கோளாறு என்றாலும் தொழிலாளர்களை நம்பாமல் நானே இறங்கி அதை ரிப்பேர் செய்வேன். ஊர் முழுக்க வெயில், மழை பாராமல் ஐஸ் வண்டி தள்ளி விற்கும் எங்கள் பணியாளர்களிடம் கனிவான அதே சமயம் சற்று கண்டிப்பான அணுகுமுறை இருந்தால்தான் விற்பனை நடக்கும். அதே போல் அதிக ரிஸ்க் எடுக்காமல், மிதமான முன்னேற்றம், நிலையான வெற்றி என்பதே எங்களின் குறிக்கோளாக வைத்திருந்தோம்.

அந்த சமயத்தில் சேலத்தில் நல்ல ஐஸ் வேணும்னா பேருந்து நிலையத்தில் இருக்கும் பிரபல ஐஸ் கடைக்குதான் போகணும். ஆனால் நாங்க ஐஸினை வீதிகளில் விற்க துவங்கியதும், மக்களிடம் நேரடியாகக் கொண்டு போனதால், அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பால் ஐஸ், ரோஸ் மில்க் ஐஸ், முலாம்பழம், மாம்பழம், கிரேப் ஐஸ் என வெரைட்டியான குச்சி ஐஸ்களை தந்தோம். முக்கியமாக 1975ல் வெனிலா ஐஸ்கிரீமை புதுமையாக குச்சியில் தயாரித்து கொடுத்த போது அதுதான் எங்களின் ஐஸ் கம்பெனியை மக்கள் மனதில் இன்று வரை நிலைத்திருக்க வைத்துள்ளது. மேலும் நாங்க ஐஸ்களில் சாக்கரின் சேர்ப்பதில்லை. லாபம் குறைவாக வந்தாலும் மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் இன்று வரை உறுதியாக இருக்கிறோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி லலிதா.

“ஆரம்பத்தில் அவர்தான் கம்பெனியை பார்த்துக் கொண்டார். குழந்தைகள் வளர்ந்த பிறகு சும்மா இருக்க பிடிக்கல. அதனால் நானும் அவருடன் சேர்ந்து தொழிலில் உதவியாக இறங்கினேன். இந்த 20 வருட வாழ்க்கை ரொம்பவே பிசியா இருக்கு. ஐஸ் நிர்வாகம் முழுதும் நான் பார்த்துக்கொள்கிறேன். அதனால் அந்தந்த காலத்திற்கு ஏற்ப நம்முடைய தொழிலையும் மாற்றி அமைத்தால்தான் நம்மால் இந்த போட்டி நிறைந்த உலகில் சர்வைவ் செய்ய முடியும்.

ஏதாவது புதுசா செய்யணும், இல்லைன்னா வாழ்க்கை மட்டுமில்லை பிசினசும் போரடிக்கும். மக்களும் நம்மை மறந்திடுவாங்க. தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் எங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. அதில் முழுக்க முழுக்க இயற்ைக முறையில் கேழ்வரகு, கொண்டைக்கடலை போன்ற நவதானியங்கள் மற்றும் சிறுதானியங்களை பயிர் செய்கிறோம். அதனைக் கொண்டு 21 வகையான சத்துமாவினை தயாரிக்கிறோம். அதனை வெளிநாட்டிற்கும் எக்ஸ்போர்ட் செய்திருக்கிறோம். மேலும் தர்மபுரியில் எங்கெல்லாம் ஐஸ் விற்பனையில் இல்லையோ அங்கெல்லாம் நாங்க விற்பனையை செய்தோம். வெண்ணாம்பட்டியில் முதன் முதலில் ஐஸ் அறிமுகம் செய்தது நாங்கதான். அதனால் ஐஸ் விற்பனை இல்லாத இடங்களுக்கு ஐஸ் வண்டிகளை ஏற்பாடு செய்தேன்.

இப்போது தெருக்குத் தெரு பெரிய பிராண்ட் ஐஸ்கிரீம் கடைகள் எல்லாம் வந்துவிட்டது. அதனால் இது போன்ற ஐஸ் வண்டிகள் மிகவும் குறைந்துவிட்டது. சேலம் முழுக்க 35க்கும் மேற்பட்ட வண்டிகள் ஓடிக்கொண்டு இருந்தது. இப்ப 10 வண்டிகள்தான் ஓடுது. ஒரு பிசினஸ் நலிவு அடைந்தால், அதைத் தொடர்ந்து வேறு சில தொழில்களை அமைக்க வேண்டும். அதனால் தற்போது நிறுவனங்களுக்கு பால் கூலிங் இயந்திரங்களை கொடுக்கிறோம். மேலும் ஜூஸ் கடைகளுக்கான ஐஸ் பார்களும் சப்ளை செய்கிறோம்.

கல்யாணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்கிறோம். என்னுடைய சிந்தனை எப்ேபாதுமே புதுமையா என்ன செய்யலாம்னுதான் இருக்கும். சமீபத்தில் இங்கு நடைபெற்ற செட்டிநாடு சந்தை உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் புதுமையா செய்ய நினைத்தேன். அதில் தோன்றியதுதான் சிறுதானிய குல்பி ஐஸ்.

இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி ஐஸ் கொடுத்திருக்க மாட்டாங்க. நானா யோசிச்சு சத்துமாவினையே ஐஸா கொண்டு வரலாம்னு நினைச்சேன். குழந்தைகளும் பயப்படாம சாப்பிடலாம். முதலில் வரவேற்பு எப்படி இருக்கும்னு தெரியல. ஆனால் அந்த உணவுத் திருவிழாவில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அது மேலும் புதுமையா ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தினை அளித்துள்ளது. என் பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். ஆனால் எங்க இருவருக்கும் இந்தத் தொழில்தான் முதன்மை என்பதால் எங்களால் முடிந்தவரை நாங்க இந்த தொழிலில் ஈடுபடுவோம்’’ என்று கூறும் இந்த தம்பதியினர் ஒவ்வொரு வருடமும் 200 குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.

தொகுப்பு: சுரபிஸ்ரீ

படங்கள்: ஜெகன்

Related posts

வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!

இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்!

பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!