ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க கோரி உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். ஜேஎம்எம் கட்சியின் தலைவரான ஹேமந்த் 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அவரை கைது செய்தது. அதன் பின்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.ஹேமந்த் சோரன் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ராஞ்சியின், பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து. ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 28ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரோங்கன் முகோபாத்யாய, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சம்பாய் சோரன் வீட்டில் ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், ஹேமந்த் சோரன் ,அவரது சகோதரர் பஸந்த் சோரன், மனைவி கல்பனா சோரன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ராஜேஷ் தாக்குர், கட்சியின் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று மாலையில் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சம்பாய் சோரன்,‘‘ ஹேமந்த் சோரனுக்கு ஏற்பட்ட விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். கூட்டணி கட்சிகளால் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது கூட்டணி கட்சிகள் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக முடிவு செய்துள்ளன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பதவியை ராஜினாமா செய்தேன். எங்கள் கூட்டணி பலமானது’’ என்றார். இதற்கிடையே, ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சில மாதங்களில் ஜார்க்கண்டில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது.ஹேமந்த் சோரன் தலைமையில் தேர்தலை சந்திக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்