பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மனுதாரராக சேர்க்கக் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி

சென்னை : முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மனுதாரராக சேர்க்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்தார்.

அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்து வந்தது.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு இன்று நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். அதில், உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, வழக்கில் தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு