நகைக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: நகைக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமம், வினாயகபுரத்தைச் சேர்ந்தவர் பார்வதி (60). இவர் கடந்த 2018ம் ஆண்டு, டிசம்பர் 7ம் தேதி திருப்பகுழி ஏரியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, முசரவாக்கம் ரேணுகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சீராளன் (49) என்பவர் பார்வதியை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீராளனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளி சீராளன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, கொலை குற்றவாளி சீராளனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

இந்த அபராத தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி பார்வதி குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி சீராளனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்