வீடு புகுந்து மருமகளிடம் நகை பறிக்க முயற்சி; கட்டிப்புரண்டு சண்டை போட்டு 4 கொள்ளையரை விரட்டிய முதியவர்: திருவாரூர் அருகே பரபரப்பு

திருவாரூர்: வீடு புகுந்து மருமகளிடம் நகை பறிக்க முயற்சி செய்த 4 கொள்ளையர்களை 82 வயது முதியவர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வீடு ஒதுக்குப்புறமான பகுதியில் தனியாக இருப்பதால் ஜெயலட்சுமியின் துணைக்கு அவரது மாமனார் வைரக்கண்ணு (82) தினமும் இரவில் வந்து தங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையர்கள் 4 பேர் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் ஜெயலட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை பறிக்க முயன்றனர். இதனை வைரக்கண்ணு தடுக்க முயன்றபோது அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். ஆனால் வைரக்கண்ணு விடவில்லை. 4 கொள்ளையர்களுடனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்.

பின்னர் தனது வீட்டில் இருந்த பெரிய வீச்சரிவாளை எடுத்து வந்து ஆவேசத்துடன் கொள்ளையர்களை நோக்கி ஓடி வந்தார். கத்தியை காட்டி மிரட்டுவது போல் பாவ்லா காட்டினால், நகையை கழற்றி கொடுத்துவிடுவார்கள் என நினைத்த கொள்ளையர்கள், வைரக்கண்ணுவின் ஆவேசத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நகை பறிப்பு முயற்சியை கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தாங்கள் வந்த இரண்டு பைக்கில் தப்பி சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார்(26), ராஜேஷ்(22), கார்த்திக்ராஜா, சிவநேசன்(23) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இளைஞருக்கு கத்திக்குத்து: சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 பேர் கைது..!!

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்