நகைக்கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய பெங்களூரு கூலிப்படை தலைவன் கைது: மும்பைக்கு தப்ப முயன்றவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீஸ்

திருவண்ணாமலை: நகைக்கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய பெங்களூரு கூலிப்படை தலைவன் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான். திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார். நகை கடை உரிமையாளர். அவரது மகன்கள் ஜித்தேஷ் (33), ஹரிசந்த் (28). கடந்த 27ம் தேதி இரவு திருவண்ணாமலை அய்யங்குள தெரு வழியாக சென்று கொண்டிருந்த ஜித்தேஷ் மற்றும் ஹரிசந்த் ஆகியோரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர், ரூ.70 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். அதைத்தொடர்ந்து, ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு இரண்டு பேரையும் விடுவித்துவிட்டு கடத்தல் கும்பல் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பிடிபட்டது. பெங்களூரைச் சேர்ந்த மனோ என்கிற கபாலி, விக்ரம், வாசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், உடந்தையாக இருந்த திருவண்ணாமலை சேர்ந்த நகை அடகு கடைக்காரர் ஹான்ஸ் ராஜ் கைது செய்யப்பட்டார்.

நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு கூலிப்படை தலைவனாக செயல்பட்டவர் பயங்கர ரவுடியான பெங்களூரைச் சேர்ந்த பில்லா (34) என்பது தெரியவந்தது. அவனை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் முகாமிட்டு தேடினர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு தப்ப முயன்ற கூலிப்படை தலைவன் பில்லாவை நேற்று தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், பில்லாவுடன் இருந்த ராஜ்குமார், மற்றும் சதீஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்