நகைக்கடை நடத்தி ரூ.100 கோடி நகை, பணம் மோசடி செய்த ஆசாமி

சேலம்: சேலம், தர்மபுரியில் நகைக்கடை நடத்தி மோசடி செய்த வழக்கில் உரிமையாளரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அரூர் நகைக்கடையை திறந்து சோதனை நடத்தினர். சேலம் வீராணம் வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் எஸ்விஎஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.100 கோடி நகை, பணத்துடன் சபரிசங்கர் திடீரென தலைமறைவானார்.

இதுதொடர்பாக சேலம், தர்மபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இவரிடம் விசாரிக்கும்போது, சேலம், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் ஆகிய பகுதிகளில் 17 இடங்களில் அவர் பல கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி மற்றும் அரூர் ஒட்டப்பட்டியில் நகைக்கடை உள்ளது. தர்மபுரி கடையில் மட்டும் போலீசார் சோதனை நடத்திய நிலையில், அரூர் கடையில் சோதனை செய்யவில்லை.

இதையடுத்து தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சபரிசங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் டான்பிட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நேற்றுமுன்தினம் காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், நேற்று அரூர் நகைக்கடையை திறந்து சோதனை மேற்கொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த சோதனையில், சுமார் 20 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள், தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் எடையை அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுத்து வருகின்றனர். இன்று விசாரணையை முடிக்கும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்