நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்!

நன்றி குங்குமம் தோழி

பொன் நகைகளை விரும்பாத பெண்களே இல்லை என்றால் மிகையாகாது. ஆனால் ஆபரணங்களை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை விட, அதை பராமரிப்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி பாதுகாப்பதால் நகைகள் நீண்ட நாட்கள் பொலிவு குறையாமல் இருப்பதோடு, அழகு குலையாமலும் இருக்கும்.

* தங்க நகைகளை தனித்தனிப் பெட்டிகளில் வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றாக வைத்தால் நகைகளில் கீரல் ஏற்பட்டு மாற்று குறையவும், கலரும் மங்கிவிட வாய்ப்புண்டு.

* நகைகளில் அதிகமாக அழுக்கு படிந்து விட்டால் சோப்புக் கலவையில் போட்டு நகைகளை கொதிக்க வைத்து, பின்பு டூத் பிரஷ் மூலம் தேய்த்து கழுவினால் புதிது போல் பிரகாசிக்கும்.

* பற்பசை அல்லது தரமான பல் பொடியில் சிறிதளவு எடுத்து டூத் பிரஷில் வைத்து, தேய்த்து சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சிடும்.

* சோப்புத் தூளையும், மஞ்சள் பொடியையும் தண்ணீரில் கலந்து, நகைகளை போட்டு ஐந்து நிமிடங்கள் தண்ணீரை கொதிக்க வைத்து, பின்பு தேய்த்துக் கழுவினால் நகைகள் மின்னும்.

* கல் பதித்த நகைகளை சூடான தண்ணீரில் போடக்கூடாது. கற்களுக்கு சேதம் ஏற்படுவதோடு, அதன் கவர்ச்சித் தன்மையும் நீங்கிவிடும்.

* பவளம், முத்து நகைகளின் மேல் ஒரு வகை கோட்டிங் இருக்கும். சூடானால் அந்த கோட்டிங் சிதைந்து விடும். ஆதலால் உயர்ந்த வகை ஷாம்புவை பயன்படுத்தி அந்த வகை நகைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

* முத்து, வைடூரிய நகைகள் மென்மையானவை. அவைகளை பிளாஸ்டிக் கவரில் வைக்கக் கூடாது. வெல்வெட், பருத்தி அல்லது பட்டுத் துணி வகைகளில் மடித்து வைக்க வேண்டும். வியர்வை, சென்ட் போன்றவை இந்த நகைகளில் படாமல் பாதுகாக்க வேண்டும். விசேஷ நிகழ்ச்சிகளில் மட்டுமே அணிந்தால் பாதுகாப்பாக இருக்கும்.

* வைரம் பதித்த நகைகளை டூத்பேஸ்ட் மற்றும் மிருதுவான டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம்.

* கல் பதித்த நகைகளை அணியும் போது மிருதுவான விரிப்புகளின் மீது வைத்து அணிய வேண்டும். அணியும் போது கை தவறி கீழே விழுந்தால் கற்கள் சேதப்படும் வாய்ப்பு உள்ளது.

* கம்மல், மூக்குத்தி இவைகளை குளியல் அறை, வாஷ்பேஸின் போன்றவற்றின் அருகில் நின்று கொண்டு அணியக்கூடாது. கை தவறி விழுந்தால் தண்ணீரில் விழக்கூடிய அபாயம் உண்டு. நகைகளை மிகவும் பாதுகாப்பாக பராமரிப்போம். நீண்ட நாட்கள் அணிந்து மகிழ்வோம்.

– எஸ்.பாவனா, திண்டுக்கல்.

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!