தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி விபத்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பரிதாப சாவு: n விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது n தாம்பரம் அருகே பரபரப்பு

சென்னை: சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வாலாஜாபாத் அருகே அளாவூர் கிராமம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கட்சியின் மாவட்ட தலைவரும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் வி.நாகராஜன் (56) தலைமையில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர், தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்றுள்ளார். இதனால் அவரது பின்னால் மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் கட்சியினர் 2 கார்களில் ஓஎம்ஆர் சாலை வழியாக வந்து வேங்கைவாசல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் கட்சியினர் காஞ்சிபுரம் செல்வதற்காக புறப்பட்டு, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் இரவு சுமார் 11.30 மணி அளவில் வந்துள்ளனர். மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடையில் இரவு உணவு சாப்பிடுவதற்காக கார்களை நிறுத்தி அங்கு கட்சியினர் உணவு சாப்பிட்டுள்ளனர்.இதில் மாவட்ட தலைவர் நாகராஜன், அசைவ உணவு வேண்டாம் எனக்கூறி, தள்ளுவண்டி கடையின் அருகே சிறிது தூரம் தள்ளி நின்றுள்ளார். அப்போது அதே தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த 3 பேர், தாங்கள் வந்த லோடு ஜீப்பை அதிவேகமாக எடுத்தபோது, லோடு ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடையில் மோதியது. மேலும், அருகே நின்று கொண்டிருந்த மாவட்ட தலைவர் நாகராஜன் மீதும் வேகமாக மோதி, சாலையோரம் நின்ற அமரர் ஊர்தி வாகனத்தில் மோதி நின்றுள்ளது. இதில் 2 வாகனங்களுக்கும் இடையே மாவட்ட தலைவர் நாகராஜன் சிக்கியுள்ளார்.

மேலும் அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் அம்மாவாசை (61), தள்ளுவண்டி கடைக்காரர் குமார் (56) ஆகியோரும் காயம் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், தலையில் பலத்த காயமடைந்த மாவட்ட தலைவர் நாகராஜனை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நாகராஜனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லோடு வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் இருக்கையில், அமர்ந்திருந்த உதயசீலன் (24) தவறுதலாக இயக்கியதில் அதிவேகமாக சென்ற லோடு ஜீப், தள்ளுவண்டி கடை மற்றும் அங்கிருந்த மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் அமாவாசை, தள்ளுவண்டி கடைக்காரர் குமார் ஆகியோர் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார், தவறுதலாக ஜீப்பை இயக்கி விபத்து ஏற்படுத்திய உதயசீலனை கைது செய்தனர்.
கே.எஸ்.அழகிரி இரங்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகராஜ் எதிர்பாராத விதமாக ஜீப் மோதியதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்