திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகரமாக கடற்கரையில் அரோகரா கோஷம் முழங்க சூரனை, ஜெயந்தி நாதர் சம்ஹாரம் செய்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் திருநாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு மேல் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள தாளம் முழங்க சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதராக அவதரித்த முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதை தொடர்ந்து பல்வேறு உருவெடுத்து வந்த சூரனை சம்ஹாரம் செய்வதற்காக மாலை 4.10 மணிக்கு கடற்கரைக்கு பக்தர்கள் புடைசூழ ஜெயந்திநாதர் எழுந்தருளினார். முதலில் கஜமுகன் வடிவெடுத்து வந்த சூரனை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் சரணகோஷம் முழங்க மாலை 4.41 மணிக்கு ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சிங்கமுக சூரனை மாலை 4.58 மணிக்கு வதம் செய்தார். தொடர்ந்து தனது சுயவடிவில் உருவெடுத்த சூரபத்மனை மாலை 5.11 மணிக்கு தனது அன்னை பார்வதி கொடுத்த சக்திவேலால் சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்.

மேலும் சேவல் வடிவெடுத்த சூரனையும் 5.24 மணிக்கு வதம் செய்து, சூரனை சேவல் கொடியாகவும், மயிலாகவும் ஏற்றார். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசித்தனர். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூரசம்ஹாரத்தை கண்டபின் பக்தர்கள் கடலில் நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.

இதை திரளானோர் தரிசித்தனர். இரவு 9 மணிக்கு 108 மகா மண்டபத்தை சுவாமி வந்தடைந்ததும் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட வெள்ளி, செம்பு யந்திர தகடுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சூரசம்ஹாரத்தின் போது கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில்முருகன், ராமதாஸ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த நவ.13ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளா பூஜை நடந்தது. பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியுடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மலைக்கோயிலில் இருந்து சின்னக்குமாரர் கிரிவீதி வந்தடையும் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி- தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் தண்டு பிரட்டல் சாப்பிட்டு சஷ்டி விரதத்தை பூர்த்தி செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

வீரபாகு, நவவீரர்கள் சமரசம் பேசும் நிகழ்ச்சியை தொடர்ந்து, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர். இதேபோல மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலிலும் அழகர்கோவில் மலைமீதுள்ள முருகப்பெருமானின் 6வது படை வீடான சோலைமலையிலும் சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.

* இன்று திருக்கல்யாணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தை சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு தெற்கு ரத வீதி- மேல ரத வீதி சந்திப்பு வந்தடைகிறார். அங்கு சுவாமி- அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், நள்ளிரவு கோயிலில் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி