ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிட்டவர் என்பதால் கடும் எதிர்ப்பு; அதிமுக நெல்லை வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்: புதிய வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிட்டவர் என்பதால் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளரின் 2வது பட்டியலை நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது, நெல்லை தொகுதிக்கு சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என்று அறிவித்தார். எடப்பாடியின் அறிவிப்புக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. காரணம், திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் தான் சிம்லா முத்துச்சோழன். இவர் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் 2016ம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் ேபாட்டியிட்டார். ஜெயலலிதாவை விட 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். சிம்லா முத்துச்சோழன் (35), கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாக கொண்டவர்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார். 2016 தேர்தலில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து திமுகவில் பயணித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்து சில நாட்களிலேயே, நெல்லை தொகுதியில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என்று எடப்பாடி அறிவித்தார். இதற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு கட்சியில் இணைந்த உடனே எப்படி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கலாம் என்று கேள்வி எழுப்பினர். மேலும், சிம்லா முத்துச்சோழன் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் கட்சி தலைமையை எதிர்பார்த்து இருந்தார். இதனால் நெல்லை மாவட்ட செயலாளரும் எடப்பாடியிடம் தனிப்பட்ட முறையில் பேசி, இந்த தேர்தலில் பணம் செலவு செய்யாமல் எப்படி வெற்றிபெற முடியும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை நெல்லை தொகுதியில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும் ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ஆ.ஜான்சிராணி (அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், திருநெல்வேலி புறநகர் மாவட்ட இணைச்செயலாளர், திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என கூறியுள்ளார்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு