2வது நாளாக ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. குழுமத்தில் விடிய விடிய சோதனை: கணக்கில் வராத ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டிய விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே.கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் 2வது நாளாக இன்றும் விடிய விடிய சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட சி.எம்.கே குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் உரிமையாளர்களாக சி.கே.வெங்கடாசலம், சி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். இந்த குழுமத்தில் தற்போது சி.எம்.கே. ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் தொடங்கினர். அதன் பிறகு சி.எம்.கே.டிரேடிங் நிறுவனம் கிரீன் பில்ட் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சி.எம்.கே. புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், டிரினேவா இன்ப்ரா புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

சி.எம்.கே. குழுமத்தின் கட்டுமான நிறுவனம் தான் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டியது. அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான அரசு ஒப்பந்தங்களை எடுத்து பல கட்டிடங்களை இந்த நிறுவனம் தான் கட்டியுள்ளது. இந்நிலையில் சி.எம்.கே. குழுமம் 2023-24 நிதியாண்டில் தனது வருமான வரித்துறை அலுவலகத்தில் தங்களது வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான ஈரோடு, சேலம், கோவை, மதுரை மற்றும் சென்னை என தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சி.கே.எஸ் குழுமத்திற்கு சொந்தமான சென்னை ஷெனாய் நகரில் உள்ள அலுவலகம், கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் உள்ள அலுவலகம், அண்ணாநகர் 10வது மெயில் ரோட்டில் உள்ள அலுவலகம், அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் சி.எம்.கே. நிறுவனத்தின் உரிமையாளர்களான வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

2வது நாளாக நடந்து வரும் சி.எம்.கே. குழுமத்தின் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரொக்க பணம், பினாமிகள் பெயரில் உள்ள துணை நிறுவனங்களின் ஆவணங்கள், பல்வேறு நிறுவனங்களின் பங்கு முதலீட்டு ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிஎம்கே குழும நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு