ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை: கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது. தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்ததாக அவர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ₹100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ₹10 கோடி அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 2017ல் உறுதி செய்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்ததால் மற்ற மூன்று பேரும் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அனுபவித்து பின் விடுதலையாகினர்.

இதனிடையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநிலத்தின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் ஆகிய நகைகளை மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் கடந்த பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த தங்க ஆபரணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த ஆபரணங்களை வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

அம்மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தீபா மற்றும் தீபக் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய வக்கீல் சத்தியகுமார், சொத்து குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார். ஆகையால் இறுதி தீர்ப்பில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே சாரும் அதை ஏலம் விடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது என்று வாதிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் அடுத்த விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்