சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரபல எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளாரான அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்திட வேண்டுமென்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசியதற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் மீது கொடும் சட்டத்தைப் பிரயோகிப்பது ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வு எண்ணத்தின் வெளிப்பாடாகும். அருந்ததிராயோடு முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு தருணங்களில் பாஜகவினரும் சங்பரிவாரத்தினரும் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தருணங்களில் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீது எல்லாம் இதுவரை சாதாரணக் கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இந்தியாவில் உபா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, கருத்துச் சுதந்திரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இவ்வாண்டு 159வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதமாக உபா சட்டத்தைப் பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

கர்நாடக மாநிலம்; சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!