ஜப்பானும், ஷாஷிமி மீனும்!

பாரம்பரியத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் முறைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் நாடு ஜப்பான். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அதிக மக்கள் வாழும் பகுதியும் இதுதான். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் ஜப்பான் உணவுகளுக்கென்று ஒரு தனி மவுசு உண்டு. அதில் கலக்கப்படும் மசாலாதான் இதற்கெல்லாம் காரணம். ஜப்பான் உணவுகளில் உள்ள சுவை சாப்பிடுபவர்களின் நாவில் நர்த்தனமாடிவிடும். ஜப்பானியர்கள் இளமையாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் உணவுப்பழக்கமும் ஒன்று. பொதுவாக இவர்களின் அன்றாட உணவுப்பட்டியலில் சோயா, காய்கறிகள், மீன், முட்டை, பழங்கள் போன்றவை நிச்சயம் இடம்பிடிக்கும்.
உணவு விசயத்தில் நமது முன்னோர் ஒரு சொலவடையை ெசால்லி வைத்திருக்கிறார்கள்.

அது ”காலையில் அரசனைப் போலவும், மதியம் மந்திரி போலவும், இரவில் சிப்பாய் போலவும் சாப்பிட வேண்டும்” என்பதுதான். அதை இன்றளவும் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்களே. இவர்கள் காலையில் மீன், இறைச்சி, சூப், முட்டை, அரிசி போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்வார்கள். தொடர்ந்து மதியம் மற்றும் இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்கள். மீன், இறைச்சி மற்றும் அரிசி உணவுகளை விரும்பி சாப்பிடும்போது அதில் சர்க்கரை, உப்பு போன்றவற்றை அதிகம் சேர்ப்பதை தவிர்த்து விடுகிறார்கள். அதோடு கேரட், வெங்காயம், தக்காளி, காளான் போன்ற காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்கின்றனர். அசைவ உணவை விரும்பாதவர்களின் மாற்று உணவாக இருக்கும் டோஃபு பல பயனுள்ள உயர் புரதத்தைக் கொண்டுள்ளது.

மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள், ஐசோஃப்ளேவேன்ஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், ஜிங்க் என பல்வேறு வகையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்கின்றன. இதுதான் ஜப்பானியர்களின் இளமையான தோற்றத்தின் சீக்ரெட்.பாரம்பரிய உணவுப் பழக்கத்தை ஜப்பானியர்கள் என்றுமே ஆர்வத்துடன் கடைபிடிக்கிறார்கள். இந்தியர்களைப் போலவே ஜப்பானியர்கள் சில உணவுகளை வேக வைத்தும், தீயில் சுட்டும் (பார்பிக்யூ) சாப்பிடுகின்றனர். ஷாஷிமி என்று அழைக்கப்படும் பச்சை மீனை விரும்பி சாப்பிடுகின்றனர். அதேபோல் சல்மோன் என்ற மீன் வகைகளையும் ஜப்பானியர்கள் பச்சையாக உண்ணுகின்றனர். ”ஷாஷிமி”யை ஜப்பானியர்கள் உணவின் தொடக்கத்தில் பரிமாறுகின்றனர். இதோடு அரிசி சாதத்துடன் கூடிய மீசோ சூப்பை சாப்பிடுகின்றனர். ருசிக்காக சோயா சாஸை பெரும்பாலான உணவுகளில் சேர்த்து சாப்பிடும் இவர்கள் ஷாஷிமியையும் இதில் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு