தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஜம்மு – காஷ்மீரில் புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த திட்டம்?: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று ெதரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படும் ஐந்து எம்எல்ஏக்கள் மீதான பார்வை அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்திற்கு முன்னதாகவே நியமனம் செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப் போலவே, துணை நிலை ஆளுநரால் நியமனம் செய்யப்படும் ஐந்து எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும் நேரத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களையும் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆகிவிடும். பெரும்பான்மை பலத்திற்கு குறைந்தபட்சம் 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதாவது ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ கருத்துக்கணிப்பின்படி, பாஜக 24 – 34, காங்கிரஸ், என்சிபி கூட்டணி 35-45, பிடிபி 4-6 இடங்களையும், ‘தைனிக் பாஸ்கர்’ கருத்துக் கணிப்பின்படி பாஜக 20-25, காங்கிரஸ், என்சிபி கூட்டணி 35-40, பிடிபி 4-7 இடங்களையும்,

‘இண்டியா டுடே சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பின்படி பாஜக 22 – 32, காங்கிரஸ், என்சிபி கூட்டணி 40-48, பிடிபி 6-12 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாகிலும் பெரும்பான்மை பலத்திற்கான 48 இடங்களை எந்த கட்சியோ, கூட்டணியோ பெறவில்லை. அதனால் தொங்கு சட்டசபை நிலைமை ஏற்படும் என்றும், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களும் கேம் சேஞ்சராக இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதால், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் அச்சமடைந்துள்ளன. ஜம்மு – காஷ்மீர் சட்டசபையை பொருத்தமட்டில், புதுச்சேரி சட்டசபை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. அங்கும், மூன்று நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப் போல பணியாற்றுவார்கள். அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுடன் கலந்தாலோசிக்காமல் இரண்டு உறுப்பினர்களை பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரது முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2017-18ம் ஆண்டில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது. முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே துணை நிலை ஆளுநர், 2 எம்எல்ஏக்களை நியமனம் செய்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு வாதிட்டது. ஆனால், இதில் எந்தவித சட்ட மீறலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதனால் ஜம்மு – காஷ்மீரில் 5 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தற்போது முக்கியமாக பேசப்படுகிறது.

இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரவீந்தர் சர்மா கூறுகையில், ‘புதிய அரசு அமைப்பதற்கு முன் ஐந்து எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமனம் செய்வதை எதிர்க்கிறோம். இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் ஜனநாயகம், மக்கள் தீர்ப்பு மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக கருதுகிறோம்’ என்றார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கவிந்தர் குப்தா கூறுகையில், ‘5 நியமன எம்எல்ஏக்கள் நியமனமானது விதிகளின்படிதான் இருக்கும். இந்த விஷயத்தில் துணை நிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. அவர் விதிகளை முழுமையாக பின்பற்றுவார்’ என்று கூறினார்.

Related posts

சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை: சி.ஐ.டி.யு. சௌந்திரராஜன்

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவு ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்