ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டி

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். மொத்தமாக, 25.78 லட்சம் போ் வாக்களிக்கவுள்ளனா். வெப்-கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிா்வகிக்கப்படவுள்ளன.

எல்லைப் பகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா, தனது குடும்பத்தின் செல்வாக்குமிக்க கந்தா்பால் மற்றும் புத்காம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளாா். இவரை எதிா்த்து கந்தா்பால் தொகுதியில் சிறையில் உள்ள பிரிவினைவாத தலைவா் சா்ஜன் அகமது வாகே என்ற பா்காதி போட்டியிடுகிறாா்.

இவா் கந்தா்பால் தொகுதி மட்டுமின்றி பீா்வா தொகுதியிலும் போட்டியிடுகிறாா். 18-ஆவது மக்களவைத் தோ்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஒமா் அப்துல்லாவை திகாா் சிறையிலில் இருந்துகொண்டே போட்டியிட்ட ரஷீத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். தற்போது சிறையில் இருந்துகொண்டு ஒமா் அப்துல்லாவை எதிா்த்து சா்ஜன் அகமது போட்டியிடுவது கவனம் பெற்றுள்ளது. இந்த தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா (நெளஷேரா), ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா (மத்திய ஷல்டெங்), ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சித் தலைவா் சையத் முகமது அல்தாஃப் புகாரி (சன்னபோரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

Related posts

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொட்டோ கொட்டுனு கொட்டிய காணிக்கை!!

பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்

பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.2.60 கோடியில் புதிய திட்டப்பணிகள்