ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 18ம் தேதி, முதல் கட்டமாக, 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.38% வாக்குகள் பதிவாகின. செப்டம்பர் 26ம் தேதி, 2ம் கட்டமாக 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 57.31% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு. ஒவ்வொரு வாக்கும் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்கும், ஒளிமயமான வருங்காலத்தை உண்டாக்கும், இதன்மூலம், உங்கள் அரசமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும்.

முதல் தலைமுறை வாக்காளர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஜம்மு காஷ்மீரின் வருங்காலம் முதல் தலைமுறை வாக்காளர்களின் பங்களிப்பால் தீர்மானிக்கப்படும். ஆகவே வாக்கு செலுத்துமாறு உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு