சிவகங்கை அருகே அய்யனார் கோயில் விழாவில்  அதிர வைத்த ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 13 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர். சிவகங்கை அருகே புதுப்பட்டியில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் பங்கேற்றன. 375 வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் பாய்ந்தோடி சென்றன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, டிரஸ்சிங் டேபிள், டைனிங் டேபிள், சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியினை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர். இதேபோல் சிவகங்கை அருகே மதகுபட்டியில் பூங்குன்ற அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 200 காளைகள் பங்கேற்றன. 100 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் காளைகள் முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதகுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் பெரும்பச்சேரியில் சமயணசாமி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 127 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு அண்டா, சேர், சீலிங் பேன், டேபிள் பேன், எவர்சில்வர் பானை, வாளி, சேர், ரொக்க பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் சிறப்பாக நின்று களமாடிய காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதில் 29 பேருக்கு முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 6 பேருக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்