சிற்பமும் சிறப்பும்: ஜலகண்டேஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஜலகண்டேஸ்வரர் கோவில், வேலூர் கோட்டை, தமிழ்நாடு.

காலம்: விஜயநகர ஆட்சியாளர் சதாசிவ தேவராயர் – பொ. ஆ1540-1572.

அகழி சூழ்ந்த பிரம்மாண்டமான வேலூர் கோட்டையினுள் அழகுடன் அமைதியாக இன்று காட்சியளிக்கும் இந்தக்கோவில், தமிழக வரலாற்றில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றுக்கு சான்றாக விளங்கியது.

கோவிலின் ஆரம்பகால கட்டுமானம் பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் சம்புவராய ஆட்சியாளர்கள் பல திருப்பணிகள் செய்தனர். பரந்து விரிந்த வெளிப்பிரகாரம், ஏழு நிலை கோபுரம், கலை நேர்த்தியுடன் கட்டப்பட்ட கல்யாண மண்டபம் மற்றும் வசந்த மண்டபம், ஆகியவற்றுடன் தற்போதைய எழில் வடிவத்தில் விஜயநகர ஆட்சியாளர் சதாசிவ தேவராயரின் (பொ.ஆ.1540-1572) ஆட்சியின் போது அமைக்கப்பட்டது.

இவ்வாலயத்தின் கல்யாண மண்டபம் மற்றும் வசந்த மண்டபத்தின் அற்புதமான கட்டிடக்கலை, தூண்களில் உள்ள நுணுக்கமான புடைப்புச் சிற்பங்கள், மேற்கூரையில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் விஜயநகர கோயில் கட்டிடக்கலையின் மேன்மைக்குக்கட்டியங்கூறுகின்றன.பேரழகுடன் காட்சியளிக்கும் கடவுள் சிற்பங்கள், புராண நிகழ்வுகள், குதிரை, யாழி மற்றும் யானைகள் மீதமர்ந்து போர் புரியும் வீரர்கள் ஆகியவை தூண்களில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன.

சிற்பிகளின் நுண்ணிய சிற்பத்திறனை எடுத்தியம்பும் லதா கும்பங்களும், அழகு உறுப்புக்களும் வெளிப்புறச்சுவரெங்கும் வியாபித்து வியப்பூட்டுகின்றன.சிவபெருமான் லிங்க வடிவில் ‘ஜலகண்டேஸ்வரர்’ என வணங்கப்படுகிறார். இறைவி அகிலாண்டேஸ்வரி.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Related posts

பக்த விஜயம்

கோணிப்பையை அனுப்பிய அபிராமி!

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்