இன்று ஜலகண்டேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம்; தெய்வ சக்தியை உள்ளடக்கியது கோயில் கலசம்: யாக சாலை பூஜையில் சக்தி அம்மா பேச்சு

வேலூர்: தெய்வ சக்தியை உள்ளடக்கியது தான் கோயில் கலசம் என்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நடந்த யாக சாலை பூஜையில் கலந்து கொண்ட சக்தி அம்மா பேசினார்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் 4வது மகா கும்பாபிஷேக விழா மற்றும் தங்கரத பிரதிஷ்டை இன்று காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 21ம் தேதி முதல் விக்னேஷ்வர பூஜையுடன், சிறப்பு ஹோமங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த 2ம் கால யாக பூஜையில் நாராயணி பீடம் சக்தி அம்மா கலந்து கொண்டார்.

அப்போது சக்தி அம்மா பேசியதாவது: கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. கும்பத்தாலோ அல்லது கலசத்தாலோதான் கும்பாபிஷேகம் நடைபெறும். கலசம் என்ற வார்த்தையை 2 ஆக பிரிக்கலாம். ஒன்று ‘கலை’ மற்றொன்று ‘ஹம்’ என்று கூறலாம். கலசம் தெய்வ சக்தியை உள்ளடக்கியது. யாக சாலையில் குடத்தில் தண்ணீர் வைத்துள்ளனர். யாக சாலை பூஜையில் தண்ணீரை, கலசத்தில் ஊற்றும்போது தீர்த்தம் என்று கூறுவோம்.

மந்திரங்கள் ஓத ஓத அது தீர்த்தமாக மாறுகிறது. மந்திரத்திற்கும், வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது. வார்த்தை சத்தம் தரும். மந்திரம் சத்தத்துடன் சக்தியை தரும். தெய்வத்தை பூமிக்கு கொண்டு வருவதுதான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேக பரிபாலனங்கள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் கோயிலில் பூஜை செய்வது கடமையாகும். கோயிலுக்கும் பெருமை சேர்க்கும். அருளாசி, சந்தோஷம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளாக அர்ச்கர் பணியை வேத சிவாகம முறைப்படி செய்து வரும் சிவாச்சாரியார்களுக்கு சக்தி அம்மா சிவாகமலக்கலாநிதி விருதை வழங்கினார்.

இதில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, பொற்கோயில் இயக்குனர் சுரேஷ், புரம் மேலாளர் சம்பத், முன்னாள் கலெக்டர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து கருவறை விமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்பி மணிவண்ணன் ஆய்வு செய்தார். கோயில் கோபுரம், கருவறை விமான கலசங்களுக்கு ெசல்லும் படிக்கட்டுகளின் பாதுகாப்பு உறுதி தன்மையை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Related posts

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்