மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை மாற்றவேண்டுமா? வன்மமாக பேசினால் ஜெகன்மோகன் வாய்க்கு பூட்டுப்போட வேண்டி வரும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

திருமலை: மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை மாற்றவேண்டும் என ஜெகன்மோகன் பேசியுள்ளார். இதுபோன்று வன்மமாக பேசினால் அவரது வாய்க்கு பூட்டுப்போட வேண்டி வரும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக விஜயவாடா, அமராவதி, என்டிஆர், கிருஷ்ணா, பல்நாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மொத்தம் 45 பேர் இறந்ததாக மாநில அரசு தெரிவித்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது.

பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிருஷ்ணா நதியின் அணை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் 11.90 லட்சம் கன அடி தண்ணீர் சேகரிக்க முடியும். ஆனால் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் பெய்த மழையில் 11.43 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததோடு விஜயவாடா நகரில் தொடர்ந்து 2 நாட்களாக 30 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. பல ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் எந்த ஒரு திட்டத்திலும் நவீன மயமாக்கப்படவில்லை. இதுவும் பல பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இருப்பினும் தற்போது போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இனி, எவ்வளவு மழை வெள்ளம் வந்தாலும் சமாளிக்க கூடிய வகையில் செய்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் இதுபோன்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் மக்களை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் உட்பட அனைவரும் பாதித்த இடத்திலேயே தங்கி பணிபுரிந்தோம். ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் புதிது புதிதாக பேசி வருகிறார். மழைக்கு தாக்கு பிடிக்காத அமராவதியை எப்படி தலைநகராக ஏற்பது? என கேட்கிறார். அப்படியென்றால் தமிழகத்தின் தலைநகர் சென்னை, தெலங்கானாவின் தலைநகர் ஐதராபாத், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை ஆகிய மாநகரங்கள் மழையின்போது வெள்ளத்தில் சிக்கியவைதான்.

அந்த தலைநகரை ஆட்சியாளர்கள் மாற்றினார்களா? இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டுவர, என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் அவர்களும் செய்தார்கள். நாமும் அதைத்தான் செய்து வருகிறோம். எனவே தலைநகரை மாற்றவேண்டும் என்பது போன்ற வன்ம பேச்சுக்களை ஜெகன்மோகன் நிறுத்தி கொள்ளவேண்டும். இனி, இதுபோன்று தொடர்ந்து பேசினால் வாய்க்கு பூட்டுப்போட வேண்டிய நேரம் வரும். இவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி

ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை