அளவாகப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை!

நன்றி குங்குமம் டாக்டர்

சுக்ரலோஸ்…

நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்கள் மீது மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முதன்மை அமைப்பான தி மெட்ராஸ் டயாபெட்டிஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (MDRF), சுக்ரலோஸ் எனப்படும் இனிப்பூட்டி பயன்படுத்தும் டைப் 2 நீரிழிவுள்ள (Type 2 Diabetes) நபர்கள் மத்தியில் இதயம் சார்ந்த வளர்சிதை மாற்ற ஆபத்துகள் மீது ஆய்வுசெய்தது. அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. சுக்ரோஸ் என அழைக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டியான சுக்ரலோஸ்- ஐ ஆசிய இந்தியர்கள் காஃபி / தேனீரில் பயன்படுத்துவது மீதான தாக்கத்தை ஆராய்வதற்காக 12 வாரங்கள் கால அளவிற்கு டைப் 2 நீரிழிவுள்ள 179 இந்தியர்களை இந்த எதேச்சையாக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு (RCT) ஆராய்ந்தது.

காஃபி மற்றும் தேநீர் போன்ற தினசரி அருந்தும் பானங்களில் சிறிய அளவில் சுக்ரலோஸ் -ஐ பயன்படுத்துவது, குளுகோஸ் அல்லது HbA1c போன்ற கிளைசெமிக் அடையாளங்கள் மீது எந்த எதிர்மறை பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கு மாறாக, உடல் எடை (BW), இடுப்பு சுற்றளவு (WC), மற்றும் உடல்நிறை குறியீட்டெண் (BMI) ஆகியவற்றில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.

ஊட்டச்சத்து அல்லாத செயற்கை இனிப்பூட்டியின் (NNS) தாக்கம் குறித்து பல்வேறு சூழல்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிற போதிலும், தேநீர் அல்லது காஃபி போன்ற தினசரி அருந்தும் பானங்களில் NNS-ன் நுகர்வால் ஏற்படும் தாக்கம் மீது மிகக்குறைவான தரவே கிடைக்கப்பெறுகிறது.

இந்தியாவில் நீரிழிவுள்ள பல நபர்கள் அவர்களது காஃபி மற்றும் தொடர்ந்து சர்க்கரையைப் பயன்படுத்துவதால், சர்க்கரை உட்கொள்ளலுக்கான ஒரு தினசரி ஆதாரமாக இந்த பானங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த ஆய்வு மிக முக்கியமானதாக ஆகியிருக்கிறது. மேலும் இந்தியாவில் ஒட்டுமொத்த மாவுச்சத்து நுகர்வு என்பது மிக அதிகமாகும். அதுவும் குறிப்பாக, வெள்ளை அரிசி அல்லது சுத்திகரிக்கப்பட்ட கோதுமை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்துகளை இது இன்னும் அதிகமாக்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு NNS-ஐ பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்த காலத்தில் இந்த ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது. ஆனால், நீரிழிவு இல்லாத நபர்களுக்கே இந்த வழிகாட்டல்கள் முக்கியமாக உரித்தானவை என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டிருந்தது. எனினும், இந்த எச்சரிக்கையானது, NNS பயன்படுத்துவது குறித்து டைப் 2 நீரிழிவு உள்ள நபர்கள் மத்தியிலும் மற்றும் சுகாதார துறையினர் மத்தியிலும் கவலைகளையும், ஐயங்களையும் எழுப்பியிருந்தது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, தலையீடு மற்றும் கட்டுப்பாடு என பங்கேற்பாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். இடையீட்டு நடவடிக்கை குழுவில் காஃபி அல்லது தேனீரில் வழக்கமான சர்க்கரைக்குப் பதிலாக சுக்ரலோஸ் அடிப்படையிலான டேபிள்டாப் இனிப்பூட்டி சேர்க்கப்பட்டிருந்தது. கட்டுப்படுத்தப்பட்ட குழுவிலிருந்து பங்கேற்பாளர்கள் வழக்கம்போல சுக்ரோஸை (சர்க்கரையை) தொடர்ந்து பயன்படுத்தினர். வாழ்க்கை முறைகளும் மற்றும் மருந்துகளும் மாற்றம் ஏதுமின்றி அப்படியே தொடர்ந்து இருந்தன. 12-வார ஆய்வின் இறுதியில், தலையீடு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையே HbA1c அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் ஆராய்ச்சியாளர்கள் காணவில்லை.

எனினும், சுக்ரலோஸ் அடிப்படையிலான இனிப்பூட்டியை பயன்படுத்திய இவர்கள் மத்தியில் சராசரி உடல் எடை, உடல்நிறை குறியீட்டெண் மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றில் சாதகமான மாற்றங்கள் காணப்பட்டன. இந்த இடையீட்டு நடவடிக்கை குழுவில் சராசரி உடல் எடை இழப்பு என்பது 0.3 கிலோகிராமாக இருந்தது. அதுபோலவே உடல்நிறை குறியீட்டெண்ணும் மற்றும் இடுப்பு சுற்றளவும் முறையே -0.1 kg/m மற்றும் -0.9 செ.மீ. அளவுக்கு குறைந்திருந்தன.

இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய MDRF-ன் தலைவரும், மூத்த நீரிழிவியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி. மோகன் கூறியதாவது: “உலகின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்தியர்களின் உணவுமுறை பழக்கவழக்கங்கள் கணிசமாக மாறுபடுவதால் இந்தியாவுக்கு இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாகும். வழக்கமாக இந்தியாவில் தேநீர் அல்லது காஃபி போன்ற தினசரி அருந்தும் பானங்களில் சர்க்கரைக்கு மாற்றாக NNS பயன்படுத்தப்படுகிறது.

கலோரி மற்றும் உட்கொள்ளும் சர்க்கரை அளவுகளை குறைக்கவும் மற்றும் சரியான உணவுமுறை இணக்கநிலையை அதிகரிக்கவும் இது உதவக்கூடும். தேநீர் மற்றும் காஃபி போன்ற தினசரி பானங்களில் அனுமதிக்கக்கூடிய ADI-க்குள் (ஏற்கக்கூடிய தினசரி சேர்க்கை அளவு) சுக்ரலோஸ் போன்ற NNS-ஐ அளவாக பயன்படுத்துவது பாதுகாப்பானதாக தோன்றுகிறது. சுக்ரலோஸ் -ன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து மேலும் அதிக ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.”

Related posts

ஆயுர்வேதத் தீர்வு!

IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

ஞானப்பல்… ஒரு பார்வை!