3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!

டெல்லி: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க 14ம் தேதி ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதைத் தொடர்ந்து மோடி, இன்று பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்.விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இந்நிலையில் 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை இத்தாலி அரசு நடத்துகிறது. இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதி அரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14-ம் தேதி ஒரு நாள் பயணமாக இத்தாலி செல்கிறார். இந்த மாநாட்டில் உக்ரைன் போர், இஸ்ரேல் போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசக்கூடும் என தெரிகிறது. அத்துடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்