இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

*₹1.21 லட்சம் பறிமுதல்: 6 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் : இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 21ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.நாகர்கோவில் இடலாக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப் பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன .

இதன் அடிப்படையில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜாண் பெஞ்சமின், ரமா, ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது பணியில் இருந்த சார்பதிவாளர் (பொறுப்பு)ஆன்றோ மெஸ்மாலின் அலுவலகத்திலும்,அவரது பைக்கிலும் சோதனை நடத்தப்பட்டது. பைக்கில் இரு தனிநபர்கள் பெயரில் இரு கவர்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த கவர்களை போலீசார் சோதனை செய்தபோது ஒவ்வொரு கவரிலும் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் இருந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது கேமரா ஆபரேட்டர் ரெஜினா மேஜையில் 2 ஆயிரத்து 900 ரூபாயும், இளநிலை உதவியாளர் ரேஷ்மா மேஜையின் பைல்களுக்கிடையே 7,600 ரூபாயும் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சாம் முத்துநாயகம் என்பவர் வைத்திருந்த பணம் ₹45 ஆயிரமும், பத்திர எழுத்து அலுவலக உதவியாளர்கள் விக்னேஷ் மற்றொரு விக்னேஷ் ஆகியோரிடம் 5 ஆயிரத்து 650 ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்க பட்டது.

இவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணம் மொத்தம் ₹1,21,150 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்திற்கு மேற்கண்ட 6 பேரும் கணக்கு சொல்லவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இதனால் நேற்று இடலாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’