வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக பிரபல ஜவுளிக்கடை, தொழிலதிபர்களின் வீடுகள் என 10 இடங்களில் ஐடி ரெய்டு: போலி பில்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக ‘வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ்’ மற்றும் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் போலி பில்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கே.கே.நகரில் ‘வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில் ஜவளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்களாக நீலகண்டன் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேசன் உள்ளனர். இவர்கள் தங்களது ஜவுளிக்கடையில் வந்த வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

அதேபோல், பட்டாளம் பகுதி ஆடிட்டர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் ஆல் இந்தியா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் பென்சனர் அசோசியேசன் கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகம், தி.நகரில் உள்ள ராதாகிருஷ்ணா சாலையில் வசிக்கும் தொழிலதிபர்களான பிரகாஷ், நாகேஷ், தினேஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வேப்பேரி ரித்தர்டன் சாலையை சேர்ந்த தொழிலபருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கோபாலபுரம் ரத்னா தெருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என சென்னை முழுவதும் கே.கே.நகர், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், பட்டாளம், தி.நகர், வேப்பேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூரில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் கடையில் இருந்து போலி பில்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதன் உரிமையாளரான கே.கே.நகர் 9வது ஷெக்டர் 54வது தெருவில் உள்ள நீலகண்டன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் வசித்து வரும் வீடுகளில் இருந்தும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதை போல், தொழிலதிபர்களான பிரகாஷ், நாகேஷ், தினேஷ் ஆகியோர் வீடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், தங்க நகைகள், ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை நடக்கும் பகுதிகளில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆயுதப்படை போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் சென்னையில் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வீடு மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு