Friday, June 28, 2024
Home » ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயம்!

ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயம்!

by Porselvi

ஆயிரக்கணக்கில் மாத சம்பளம் கொடுத்த ஐ.டி. வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கிய நபர் இன்று அதைவிட அதிக வருமானம் எடுத்து அசத்தல் சாதனை செய்து வருகிறார். முழுக்க, முழுக்க இயற்கை விவசாயமும், நம் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன்.தற்போது பச்சை பயறு சாகுபடி செய்துள்ள வயலை மாலை வேளையில் பார்வையிட்டு களைகளை அகற்றியபடி இருந்த அவர் நம்மிடம் கூறியதாவது:சென்னையில் ஐடி துறையில் 12 ஆண்டுகள் வேலை பார்த்தேன். மாதம் ரூ. 80 ஆயிரம் வருமானம். இருந்தாலும் மனதில் மகிழ்ச்சி இல்லை. வருமானம் அதிகமாக கிடைத்தாலும் ஏதோ நிறைவில்லாத மனதுடன் வேலை பார்த்து வந்தேன். அப்பா விவசாயி. அதனால தொடக்கத்திலேயே இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். சொந்த ஊரில் இருந்து முன்னேறணும் என்ற எண்ணம்தான் நிலைத்து இருந்தது. அப்பா ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தார். ஆனால் எனக்கோ இயற்கை வழி விவசாயம்தான் பிடித்தது. இதற்காக பலவித தேடுதல்கள். அப்போதான் திடீரென்று மாரடைப்பால் அப்பா இறந்தார். ஒரு பக்கம் அப்பா இறந்த சோகம் மறுபக்கம் ஐடி வேலையால் ஏற்பட்டு வந்த மன உளைச்சல் மற்றும் உடல் நலபாதிப்பு. முக்கியமாக மகிழ்ச்சியேஇல்லாத நிலை.

அப்போதுதான் கொரோனா காலகட்டம். லாக்டவுன். வீட்டிலிருந்தே வேலை என்ற நிலையில் தஞ்சாவூருக்கு குடும்பத்தோடு வந்தேன். நிறைவான மனநிலை ஏற்படணும்ன்னா இயற்கை விவசாயம் செய்து நம்மால் முடிந்தவரை நல்ல பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அம்மா பானுமதியிடமும், என் மனைவி பிரியங்காவிடமும் ஐ.டி.வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்ய போறேன் என்று சொன்னேன். வருஷத்துக்கு ஏறத்தாழ ரூ. 12 லட்சம் கிடைத்து வந்த வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை நம்பி பெரும் நம்பிக்கையோடு இறங்குகிறேன் என்று சொன்னேன். என் அம்மாவும், மனைவியும் எவ்வித தடையும் இன்றி ஓகே சொன்னாங்க. எங்களுக்கு சொந்தமான 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்வதுன்னு முடிவு செஞ்சாச்சு. அதுக்கு முன்னாடியே வயலை எப்படி இயற்கை விவசாயத்திற்கு தகுந்தது போல் மாற்றுவது என்று பலரிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தேன். இதனால் முழுக்க முழுக்க மாட்டுச்சாண எருவை மட்டும் வயலில் இட்டு விவசாயத்தை செய்யணும்னு முடிவு செய்தேன். இரண்டு முறை உவு செய்த பின்னர் எருவை கொட்டி மீண்டும் ஒருமுறை உழவு மேற்கொண்டேன். தொடர்ந்து நம் பாரம்பரிய மிக்க ரகங்களான பூங்கார்: 90 நாள் பயிர்,அருவத்துக்குறுவை: 80 நாள் பயிர், மாப்பிள்ளை சம்பா: 150 நாட்கள், கருப்பு கவுனி: 140 நாட்கள், ஆத்தூர் கிச்சிலி சம்பா: 135 நாட்கள், ஸ்வர்ணமசூரி: 120 நாட்கள், ஜீரகசம்பா: 130 நாட்கள், காட்டுயானம்: 180 நாட்கள், தூய்மல்லி: 130 நாட்கள், சிவன் சம்பா: 140 நாட்கள் என்று அனைத்து ரகங்களின் சாகுபடி காலத்தை தெரிந்து கொண்டு களம் இறங்கினேன். இந்த ரகங்கள் அனைத்தும் மருத்துவக்குணங்கள் நிறைந்தவை. நிலத்தை தயார் செய்த பின்னர் நான் முப்போகம் சாகுபடி செய்ய விரும்பவில்லை. 2 போகம் போதும். ஒரு போகம் பச்சைப்பயறு, உளுந்து சாகுபடி செய்வது என்று திட்டவட்டமாக இருந்தேன். அதன்படி குறுவை, சம்பா மட்டுமே இதுநாள் வரை செய்து வருகிறேன்.

முதல் 2 வருடம் மட்டும்தான் சாண எரு அடித்து வயலை உழுதேன். சாகுபடியின் போது பஞ்சகவ்யா, மீன் அமிலம் என்று இயற்கை முறையில் பயிர்களுக்கு இட்டேன். அதற்கு பிறகு நாற்று நடுதல், களை பறித்தல் மட்டுமே எவ்வித இயற்கை உரமும் இடவில்லை. இப்போ ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அருமையான வருமானம். ஐ.டி.யில் வேலை பார்த்ததை விட இப்போ கூடுதலாக சம்பாதிக்கிறேன். மாப்பிள்ளை சம்பா: 150 முதல் 160 நாட்கள் வரை வளரும். இது சம்பா பருவத்திலும், மற்றும் பின் சம்பா பருவத்திலும் பொதுவா பயிரிடப்படுது. இந்த நெற்பயிர்கள், களிமண் அப்புறம் மணல் கலந்த களிமண் அந்த மாதிரியான நிலங்கள்ல சுமார் 120 செமீ உயரத்துக்கு வளருது. சொரசொரப்பான தானியத்த கொண்டிருக்கிற இந்த அரிசி சாம்பல் கலந்த செந்நிறமா காணப்படுது. நிலத்தில தண்ணீரே இல்லாம நிலம் காய்ந்து ஒரு மாத காலம் இருந்தாக்கூட மாப்பிள்ளைச் சம்பா வாடாது. அதேமாதிரி கனமழையால பல நாட்கள் நீருல மூழ்கிக் கிடந்தாலும் மாப்பிள்ளை சம்பா அழுகிப் போகாது. இயற்கைச் சீற்றங்கள எல்லாம் தாங்கி வளரக்கூடிய இந்த ரகம், பூச்சித்தாக்குதல்களாலும் எளிதா பாதிக்கப்படாது. இயற்கையான முறையில சாகுபடி செய்றதே இந்த நெல் ரகத்துக்கு ஏத்தது. கருப்பு கவுனி: 150 முதல் 160 நாட்கள் வரை வளரக்கூடிய இந்த கருப்புக் கவுனி நெல்லில் இருந்து பெறப்படும் கருமை நிற அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதயம், மூளை மற்றும் ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தை இந்த கருப்புக் கவுனி அரிசி மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர் பல ஆண்டுகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். என்னுடைய நிலத்தில் கருப்புக் கவனி நெல்லை பயிரிட்டேன். நாற்று நடுதல், களை எடுத்தல் என ஒரு ஏக்கரில் சாகுபடி முழுமைக்கும் ரூ.15 ஆயிரம்தான் செலவு. அந்த ஒரு ஏக்கரில் நான் சாகுபடி செய்த கருப்பு கவுனியை மதிப்பு கூட்டி அரிசியாக்கி விற்பனை செய்ததில் அந்த சாகுபடி காலத்தில் மட்டும் ரூ.85 ஆயிரம் வரை லாபம். 6 ஏக்கரிலும் விளைச்சல் எப்படி இருக்கும் என்றுபார்த்துக்கோங்க.

நான் சாகுபடி செய்யற அனைத்து ரகங்களையும் மதிப்புக்கூட்டி அரிசியாக்கி சமூக வலைத்தளங்கள் வாயிலாக விற்பனை செய்கிறேன். தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் இருந்தும் இப்போ எனக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்போ மேலும்6 ஏக்கரை குத்தகை எடுத்து சாகுபடி செய்கிறேன். இரண்டு போகம் நெல் சாகுபடின்னா, அடுத்தது பச்சை பயறு, உளுந்து சாகுபடி செய்யறேன். இதுவும் இயற்கை முறைதான். சுத்தமான, உயர்ந்த தரமான பொருட்களுக்கு நம் மக்கள் எப்போதும் ஆதரவு தருவாங்க. இப்படிப்பட்ட ரகங்களை நாமும் உண்டு நஞ்சில்லா வாழ்வை வாழ வேண்டும் என்பதே என் நோக்கம். சாகுபடி செய்யப்படும் பல்வேறு ரக நெல் மற்றும் உளுந்து பயிர்களை அரிசியாகவும், உளுந்தாகவும் மற்றும் அதனை மதிப்புக் கூட்டி அவல் மற்றும் பச்சை பயிராகவும் விற்பனை செய்கிறேன். ஐ.டி.யில் வேலைபார்க்கும் போது மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம். இப்போ அதை தாண்டி செலவுகள் போக 3 மடங்கு அதிகம் வருமானம். நிம்மதியான வாழ்க்கை மனநிறைவோடு அருமையா செல்கிறது. அடுத்ததாக காய்கறிகள் சாகுபடி செய்யணும். உரலில் நெல்லை குத்தி கைக்குத்தல் அரிசியை விற்பனை செய்யணும் என்று எதிர்கால திட்டங்கள் பற்றி பெருமிதத்தோடு கூறி விட்டு தனது மகள்கள் மிருணாளினி, ஷிவானியை மகிழ்ச்சியுடன் அணைத்தபடியே தெரிவித்தார்.
தொடர்புக்கு:
விக்னேஸ்வரன்: 99402 30929

You may also like

Leave a Comment

fourteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi