ஈஸ்வரன் 191, ஜுரெல் 93 இதர இந்தியா 416 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சில் மும்பை திணறல்

லக்னோ: ரஞ்சி சாம்பியன் மும்பை அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், இதர இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற இதர இந்தியா முதலில் பந்துவீச… மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன் குவித்து ஆட்டமிழந்தது (சர்பராஸ்கான் 222*). இதர இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5விக்கெட் அள்ளினார்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இதர இந்தியா 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 151, துருவ் ஜுரெல் 30 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். 42 ஓவர்கள் இணைந்து விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்தனர். துருவ் ஜூரல் 93 ரன் (121 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), ஈஸ்வரன் 191 ரன் (292 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, இதர இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (110 ஓவர்). மும்பை பந்துவீச்சில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் தலா 3, மோகித் அவஸ்தி 2 விக்கெட் கைப்பற்றினர்.121 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை, 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்துள்ளது.

பிரித்வி ஷா 76 ரன் விளாச, சக வீரர்கள் ஏமாற்றமளித்தனர். சர்பராஸ் கான் 9, தனுஷ் கோடியன் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, மும்பை 274 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு