இஸ்ரேல் எல்லைக்குள் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுப்பு : மொத்தம் 3,100 பேர் பலி

ஜெருசலேம் : இஸ்ரேல் எல்லைக்குள் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது.கடந்த 7ம் தேதி அதிகாலை இஸ்ரேல் நகரங்கள் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அத்துடன் இன்றும் பல ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நகரங்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 8ம் தேதி போர் தொடங்குவதாக அறிவித்த இஸ்ரேல், தற்போது காசா நகரம் மீது இடைவிடாது குண்டுகளை வீசி வருகிறது.இதுவரை இரு தரப்பிலும் 1,600க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் இஸ்ரேல் எல்லைக்குள் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்தது. அதனால் மொத்தம் 3,100 பேர் பலியானது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 900 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இவர்களில் 123 வீரர்களும் அடங்குவர். காசாவின் மக்கள்தொகை நெருக்கமான ரிமால் மற்றும் கான் யூனிஸில் 200க்கும் மேற்பட்ட இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்தியதால், அவற்றையும் தகர்த்தோம். காசாவின் முழு பகுதியில் பெரும்பாலான இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை