இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் கொலை?: உளவுத் துறை ரகசிய விசாரணை

காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகள் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிப்பதாக சபதம் எடுத்து, கடந்த ஓராண்டாக நூற்றுக்கணக்கான ஹமாஸ் தளபதிகளை கொன்றுள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் ஈரான் மண்ணில் கொல்லப்பட்டார். இந்நிலையில் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் யஹ்யா சின்வாரையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை. யஹ்யா சின்வாரின் மரணத்தை உறுதி செய்ய இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேலிய ஊடகமான ‘டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ வெளியிட்ட அறிவிப்பில், ‘ஹமாஸ் புதிய தலைவர் யஹ்யா சின்வார், சமீபத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக உளவுத்துறையை ராணுவம் பயன்படுத்தி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் யஹ்யா சின்வார் கொல்லப்படவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதை நம்புவதாகவும் ‘வாலா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் தெற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40ஆக உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி அருகே சாலையில் உலா வரும் காட்டு மாடு: பொதுமக்கள் அச்சம்

தசரா திருவிழாவுக்கு 10 நாட்களே உள்ளதால் குலசேகரன்பட்டினத்தில் பாசி மாலை விற்பனை ஜோர்