இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது ஏவுகணைகள் வீச்சு: ஹிஸ்புல்லா பதிலடி

பெய்ரூட்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. 10 மாதங்களை கடந்து நீடித்து வரும் போரில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதேபோல் காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினருக்கு லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா படையினரும், ஏமனில் இயங்கும் ஹவுதி படையினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்களை ஒரேநேரத்தில் வெடிக்க செய்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர். 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மறுநாள் வாக்கி டாக்கியை வெடிக்க வைத்து இஸ்ரேல் தாக்கியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் இடங்களை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 51 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இஸ்ரேலின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீதி ஹிஸ்புல்லா நேற்று தாக்கியது. மேலும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் தலைமையகம் மீது கார்டர்-1 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது இதுவே முதல்முறை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

* லெபனான் மீது தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு
லெபனான் மீது இதுவரை வான்வெளி தாக்குதலை மட்டுமே நடத்திய இஸ்ரல் இப்போது தரை வழி தாக்குதல்களை நடத்த தயாராகி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தினரிடையே உரையாற்றிய இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹவேலி, “இதுவரை லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்கள் லெபனானுக்குள் எளிதாக நுழைவதற்கான தளத்தை தயார்படுத்துவதற்கும், ஹிஸ்புல்லா அமைப்பினரை பலவீனப்படுத்துவதற்கும் நடத்தப்பட்டது. இனி லெபனான் மீது தரை வழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது” என்று கூறினார்.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?