இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் 100 நாட்களில் 10,000 குழந்தைகள் கொலை: இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்ட பகீர் அறிக்கை

லண்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் கடந்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதலால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவிகளும் பாதிக்கப்படுவதாக ‘சேவ் தி சில்ரன்’ என்ற அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டில் இருந்து செயல்படும் ‘சேவ் தி சில்ரன்’ (உலகளவில் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ கூறுகையில், ‘காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். காசாவில் வசித்து வரும் 11 லட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்த கொலைகள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பெற்றோரை இழந்து சொல்லொணாக் கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். காசாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்.

காசாவில் 370 பள்ளிகள் சேதமடைந்த அல்லது முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன. 94 மருத்துவமனைகள் செயல்படவில்லை. போர் நிறுத்த முயற்சிகள் பலனளிக்காததால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமை பயங்கரமானது. மனித குலத்தின் மீதான பேரழிவு’ என்றார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்