இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காமல் அரசு புறக்கணித்தது என்பது உண்மைக்கு மாறானது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட செய்தியில், வக்ப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு, வக்ப் சட்டத்தினை திருத்துவதற்கு, வக்ப் வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை, மாநிலங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை கலந்து ஆலோசிக்காமல் மக்களவையில், அறிமுகம் செய்தது. இச்சட்ட திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது

வக்ப் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக் கேட்கும் கூட்டம் நேற்று சென்னையில் நடத்தப்படுவது குறித்து மக்களவை செயலகம் மாநில அரசுக்கு தெரிவித்தது. ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. இக்கூட்டத்தில் மாநில அரசு பிரநிதிகள், வக்ப் வாரியம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரதிநிதிகள், பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், முத்தவல்லி மற்றும் உலமாக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர், ஒருசில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காமல் அரசு புறக்கணித்தது என்று தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!