ஐஎஸ்எல் கால்பந்து சீசன் 11: சென்னை – முகமதன் இன்று மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11வது சீசன் செப்.13ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. சென்னையின் எப்சி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (செப்.14, புவனேஸ்வர்) 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிஷா எப்சி அணியை வீழ்த்தியது. அதே உற்சாகத்துடன் இன்று சொந்த மண்ணில் முகமதன் எஸ்சி அணியை சந்திக்கிறது. முகமதன் தனது முதல் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. நாட்டின் பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்றாக முகமதன் முதல் முறையாக ஐஎஸ்எல் தொடரில் சென்னை அணியை சந்திக்கிறது.

ஒவன் கோயல் தலைமையிலான சென்னை அணியின் சவுத்ரி, எட்வர்ட், லால்தின்புயா, சிங், ஷீல்ட்ஸ், சீமா, நம்பிக்கை நட்சத்திரம் விக்னேஷ் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இன்றும் அதிரடியை தொடரக்கூடும். எனினும் கார்த்திக் திருமலை உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்கள் யாருக்காவது உள்ளூரில் நடக்கும் ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. அதே சமயம், பெரும்பாலான நேரம் சிறப்பாக விளையாடியும் கடைசி நிமிட கோலால் தோற்ற முகமதன் எஸ்சி அணி, 2வது போட்டியில் சென்னைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திட்டத்துடன்தான் சென்னை வந்துள்ளதாக முகமதன் பயிற்சியாளர் ஆந்த்ரே செரனிஷோவ் தெரிவித்துள்ளார். எனவே, இன்றைய ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். நடப்பு சீசனில் சென்னையில் நடக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?