சாத்தியமா?

இந்தியாவில் கடந்த 1967ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. புதிய மாநிலங்கள் உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரபிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேற்று முன்தினம் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது பாரதிய ஜனதாவின் நீண்ட கால திட்டம். அதை நிறைவேற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போதுள்ள ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம், சிஏஏ சட்டம் அமல் ேபான்றவை நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அதை செய்து முடித்தது. அதேபோல், ஒரே நாடு-ஒரே தேர்தல் நடைமுறையையும் அமல்படுத்திவிட வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு துடிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல், ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. இந்த நடைமுறையால், தேர்தல் செலவு குறையும்
என பாஜ தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், ‘‘தேர்தல் நடத்துவதை வெறும் செலவு பிரச்னையாக மட்டும் சுருக்கிவிட முடியாது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்போது, சில மாநில அரசுகளை, அவற்றின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்கவேண்டிய சூழல் உருவாகும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’’ என எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும், ஒன்றிய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. ராம்நாத் கோவிந்த் பரிந்துரையை ஏற்று, 2029ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், 2026, 2027, 2028-ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029ம் ஆண்டு வரை மட்டுமே இருக்கும். அதாவது, தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டில் முதல்வராகும் நபருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் கிடைக்கும்.

ஒன்றிய பாஜ ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றை மீறி, சட்டத்திருத்தங்கள் என்ற பெயரில், ஒன்றிய அரசு, தனது திட்டங்களை, ஒவ்வொன்றாக செய்து முடித்து வருகிறது. ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. மாநில அரசை கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. இதை, உணர்ந்து, ஒன்றிய அரசு செயல்பட்டால் நல்லது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு