சாயம் வெளுக்குமா?


நாடாளுமன்ற தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிரடியான ஒரு  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும், இதன்மூலம் பல லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமை குறையும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதால்தான் மகளிர் மீது பிரதமர் மோடிக்கு திடீர் பாசம் வந்துவிட்டது என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது. மேலும் இது அப்பட்டமான தேர்தல் நாடகம் என்றும் எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு புலம்பியபோது அந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு சுமையை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஆனால் அதற்கெல்லாம் மோடி செவிசாய்க்கவில்லை. காஸ் விலையை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தனை போராட்டம், எதிர்ப்புகள் வந்தும் மகளிர் மீது கரிசனம் காட்டாத பிரதமர் மோடி இப்போது திடீரென கரிசனம் காட்டுவது ஏன்? என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாகவே மகளிர் தினம் வந்து போனது. அப்போதெல்லாம் அறிவிப்பு வெளியிடாத பிரதமர் மோடி, தற்போது லோக்சபா தேர்தலை மனதில் வைத்துதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இது அவரது தேர்தல் தோல்வி பயத்தை காட்டுகிறது என எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 2014-ம் ஆண்டு பாஜ அரசு பொறுப்பேற்றபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ரூ.106 டாலராக இருந்தது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410 மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயு விலை ரூ.1000க்கு மேல் உயர்ந்துள்ளது.

இது எப்படி? உண்மையிலேயே மக்கள் மீதும், மகளிர் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டிருந்தால், இந்த அறிவிப்பை எப்போதே வெளியிட்டிருக்கலாம். தேர்தல் நெருங்கும்போது மட்டும் வெளியிட வேண்டிய அவசியமில்லை. இதுவரை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் 9 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மோடி அரசு குறைத்திருக்கலாம்.

அப்படி குறைத்திருந்தால், அது மக்கள் மீது அக்கறை கொண்ட முடிவு என போற்றப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அறிவித்திருப்பது தேர்தலை மனதில் வைத்துதான் என்பதையும், இது பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசின் பம்மாத்து வேலை என்பதையுமே காட்டுகிறது. இந்த வேஷம், மக்களிடம் எடுபடாது என்பது மட்டும் நிச்சயம்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு