முறைகேடு புகார் எதிரொலி கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது: அமலாக்க துறை நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில வால்மீகி பழங்குடியின மேம்பாட்டு வாரிய மேற்பார்வையாளர் சந்திரசேகரன் கடந்த மே 27ம் தேதி ஷிவமொக்கா மாநகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த குறிப்பில் மாநில பழங்குடியின அமைச்சராக இருந்த பி.நாகேந்திராவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. அதை தொடர்ந்து பாஜவினர் வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து ஜூன் 6ம் தேதி அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்தார். இதனிடையில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் நடந்துள்ள முறைகேடு புகார் காரணமாக கடந்த புதன்கிழமை அமலாக்க துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சரும் பல்லாரி ஊரக தொகுதி பேரவை உறுப்பினருமான பி.நாகேந்திரா, கர்நாடக வால்மீகி வளர்ச்சி வாரிய தலைவரும் ரெய்ச்சூர் தொகுதி பேரவை உறுப்பினருமான பசனகவுடா தத்தால் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

48 மணி நேரம் இருவரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆணவங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள பி.நாகேந்திரா வீட்டிற்கு சென்ற அமலாக்க துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தியபின், பெங்களூரு சாந்திநகரில் உள்ள கர்நாடக மாநில வால்மீகி வளர்ச்சி வாரிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முன்னதாக நாகேந்திராவின் உதவியாளர் ஹரிஷையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு