இரானி கோப்பை: மும்பை 237/4

லக்னோ: இதர இந்தியா அணியுடனான இரானி கோப்பை போட்டியில் (5 நாள்), ரஞ்சி சாம்பியன் மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இதர இந்திய அணி கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி ஷா 4, ஹர்திக் தமோர் 0, ஆயுஷ் மாத்ரே 19 ரன்னில் வெளியேற, மும்பை 11.1 ஓவரில் 37 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் ரகானே – ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 57 ரன் (84 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி யாஷ் தயாஸ் பந்துவீச்சில் ருதுராஜ் வசம் பிடிபட்டார்.

அடுத்து ரகானே – சர்பராஸ் கான் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணி 68 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரகானே 86 ரன், சர்பராஸ் 54 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இதர இந்தியா பந்துவீச்சில் முகேஷ் குமார் 3, யாஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி