இறச்சகுளம் அரசு பள்ளி அருகே இன்று காலை பரபரப்பு; லாரியில் இருந்து சாலையில் விழுந்த 30 டன் பாறாங்கல்: அரசு பஸ், லாரியை சிறைபிடித்து மறியல்

பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இந்த லாரிகள் பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் வழியாகத்தான் அதிகமாக செல்கின்றன. இந்நிலையில் இன்று காலை 7.15 மணியளவில் இறச்சகுளம் மெயின் ரோடு வழியாக பெரிய பாறாங்கல்லை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென லாரியில் இருந்த சுமார் 30 டன் எடையுடைய பாறாங்கல் சாலையில் உருண்டு விழுந்தது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு திரண்ட பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து பாறாங்கல்லை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘அடிக்கடி இதுபோன்ற சம்பவம் இப்பகுதியில் நடக்கிறது. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட யாரும் வராததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர கலை விழாவுக்காக ரஜினிகாந்த் உடன் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் மாற்றம்