மவுன ஊர்வலத்தை முன்னிட்டு அண்ணாசாலை- மெரினா வரை இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலை முதல் மெரினா வரை மவுன ஊர்வலம் நடைபெறுவதால் இன்று காலை 8 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் செல்ல உள்ளனர். எனவே மேற்படி சாலைகளில் போக்குவரத்து தடையின்றி செல்ல சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் தேவைப்பட்டால் போர் நினைவிடத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாகவும், காந்தி சிலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாகவும் திருப்பி விடப்படும். மேலும், அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலையை நோக்கி ஊர்வலம் செல்லும்போது அண்ணா சிலையிலிருந்து, பெரியார் சிலையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படும். வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் ரோடு, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு இந்த சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் சென்று தங்களது இலக்கை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்