முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ரூ.525 கோடி மோசடி: மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை

சென்னை: முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக ரூ.525 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டோர் ேநற்று தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் நிதியை நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் தேர்தல் செலவுக்கு மடைமாற்றி மோசடி செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட் நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி என ரூ.525 கோடி வரை நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். தற்போது ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் உள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் கட்சியை நடத்தி வரும் தேவநாதன் யாதவ், தற்ேபாது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தவித நிதியும் அளிக்காமல், பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் முன்பு திரண்டனர். தங்களது முதலீட்டு பணத்தை முழுமையாக தர வேண்டும் என்றும், இதற்கு தேவநாதன் யாதவ் உரிய பதிலை தர வேண்டும் என்றும் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். ஆனால் எங்கள் முதலீடு பணத்தை தேர்தல் செலவுக்கு எடுத்துச் சென்று தேவநாதன் செலவு ெசய்துவிட்டதாகவும், எனவே எங்கள் முதலீட்டு பணத்தை உடனே தர வேண்டும் என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிமாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா