புலன் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி 3வது தளத்தை திறக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சீல் வைக்கப்பட்ட பள்ளியின் ஏ பிளாக் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் மாடி பகுதிகளை தவிர மற்ற பகுதிகளை பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ஆர்.சாம்ராட், வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஏ பிளாக்கில் உள்ள மூன்றாவது தளம், மாடியை திறக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரினார். பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய அனுமதி பெறாமல் மூன்றாவது தளம் கட்டப்பட்டுள்ளதால் அதனை திறக்க அனுமதிக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்பி தனியாக நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை