விசாரணை அமைப்புகள் குற்றப்பத்திரிகையை எந்த மொழியிலும் வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘நீதிமன்றத்தின் வழக்காடு மொழியில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென எந்த சட்டப்பிரிவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இல்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான அம்மாநில அரசின் தேர்வாணையமான வியாபமில் பல முறைகேடு நடந்தது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு 2015ல் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நரோட்டம் தாகத் மற்றும் சுனில் சிங் ஆகியோர், ஆங்கிலத்தில் தாக்கல் செய்த சிபிஐயின் குற்றப்பத்திரிகை தங்களுக்கு புரியாததால் அது சட்டவிரோதனமானது என்றும் தங்களுக்கு ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிபதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அளித்த உத்தரவில், ‘‘நீதிமன்றத்தின் வழக்காடு மொழியில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எந்த சட்டப்பிரிவும் குறிப்பிடவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு புரியவில்லை என்பதற்காக அதை சட்டவிரோதமானது என கூற முடியாது. அதன் அடிப்படையில் ஜாமீனும் வழங்க முடியாது.

அதே சமயம், தனக்கு எதிரான என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதை குற்றவாளி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு மொழி புரியாத பட்சத்தில் மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்துள்ளது. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய படிவங்களில் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதனால் மொழிபெயர்ப்பு நகல் வழங்க முடியாது என்ற விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும்’’ என தீர்ப்பளித்தனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்