வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசில் புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் சத்யமூர்த்திபவனில் மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உருவபடத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும், அவர்களின் வழி தோன்றல்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினார். தொழிலதிபர் நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல், கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:

கட்டுமானம் முடியாமல் கும்பாபிஷேகம் செய்தால் நாடு எப்படி உருப்படும். நான் சாபம் விடுவதாக நினைக்க வேண்டாம். உண்மை அது தான். கோபுரம் கட்டாமல் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். சாமி சும்மா விட்டு விடுவாரா? நீங்கள் செய்வது தவறு என்று 4 சங்கராச்சாரியார்களும் சொன்னார்கள். ராமர் கோயில் கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். பாஜகவின் கனவு நிச்சயமாக ஒருபோதும் பலிக்காது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஹிட்லர் எந்தவிதமான வன்முறையையும், தந்திரத்தையும் கையாண்டாரோ அதே போன்ற தந்திரத்தை பிரதமர் மோடி கையாண்டு வருகிறார். மோடி அரசு நாட்டுக்கு பாதகம் செய்கிற அரசு. கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை தான் செய்ததை தவறு என்று ஒத்துக் கொண்டதில்லை. காந்தியை பற்றி விமர்ச்சித்து பேசிவிட்டு இப்போது தான் முதன் முறையாக தான் பேசியது தவறு என்று ஒத்துக் கொண்டுள்ளார். அது தான் காந்தியின் சக்தி.

அதிமுக பாஜகவை துறந்ததை ஏன் நாங்கள் வரவேற்கவில்லை என்றால், இவர்களுக்குள் ஒரு கள்ள உறவு இருக்கிறது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அதிமுக நம்பத்தகுந்த மனிதர்களாக இல்லை. பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி. காங்கிரசில் புது முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாநில துணைத் தலைவர்கள் கோபன்னா, பொன்.கிருஷ்னமூர்த்தி, ராம சுகந்தன், மாநில பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, தமிழ்செல்வன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டில்லி பாபு, கலை பிரிவு தலைவர் சந்திர சேகர், இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்