மின்சாரம் தொடர்பான புகார்களை செல்போன் செயலியில் தெரிவிக்கும் வசதி அறிமுகம்

சென்னை: மின்சாரம் தொடர்பான புகார்களை செல்போன் செயலியில் தெரிவிக்கும் வசதியை மின்வாரியம் துவக்கி உள்ளது. மின்சார வாரியம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்தடை புகார் குறித்து தெரிவிப்பதற்காக, மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவலை பதிவு செய்த பின்னர் உடனடியாக மின்தடை ஏற்பட்ட பகுதிக்கு மின்வாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அவர்கள் அந்த மின்தடையை சரி செய்த பின்னர் மின்னகத்திலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு மின்தடை சீரமைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்வார். இந்த சேவையானது 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்னகத்தில் ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால் புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்கட்டணத்தை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் செலுத்த ‘TNGEDCO’ என்ற செல்போன் செயலியை மின்வாரியம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் கம்ப்ளைன்ட் என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மின்தடை, மீட்டர் பழுது, மின் கட்டணம், மின்னழுத்த பிரச்னைகள் குறித்தும், சேதமடைந்த மின்கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்து விழுந்து இருப்பது ஆகியவை தொடர்பாக புகார் அளிக்கும் சேவையை வாரியம் துவங்கி உள்ளது. அந்த செயலியில் மீட்டர் பழுது மற்றும் மின் கட்டண புகார்களுக்கு மின் இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை மின் இணைப்பு எண் குறிப்பிடாமல் பதிவிடலாம்.

அவ்வாறு பதிவிடும் போது எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, செல்போனில் உள்ள லொகேஷன் வசதி மூலம் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரிக்கு தானாகவே புகார் பதிவு செய்யப்படும். இந்த செயலியை தினந்தோறும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் செல்போன் செயலியில் பதிவிடப்படும் புகார்கள் மீது பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது

சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் அறிவிப்பு