கேர்ன் ஹில் சூழல் சுற்றுலா மையத்தை சைக்கிள் மூலம் சுற்றி பார்க்கும் வசதி அறிமுகம்

ஊட்டி : கேர்ன் ஹில் சூழல் சுற்றுலா மையத்தை சைக்கிள் மூலம் சுற்றி பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,தொட்டபெட்டா,படகு இல்லம்,பைக்காரா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இயற்கையோடு இணைந்த சுற்றுலாவை காண்பதற்காக அதிக அளவு விரும்புகின்றனர்.

இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களிலும் வனத்துறையினர் சூழல் சுற்றுலா மையங்களை உருவாக்கி அதன் மூலம் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கின்றனர். அந்தந்த பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களைக் கொண்டு சூழல் சுற்றுலாத்தலங்களை நடத்தி வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள கேர்ன் ஹில் வனப்பகுதியிலும் இதே போன்று சூழல் சுற்றுலா மையம் மற்றும் வனத்துறை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அடங்கிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு பறவைகளின் சத்தங்களை கேட்கும் வகையில் இங்கு நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் மட்டுமின்றி அதன் ஒலிகளையும் கேட்டு மகிழ்ந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிதாக இந்த சூழல் மையத்தில் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த சைக்கிள் மூலம் கேர்ன் ஹில் சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.
தற்போது இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்கள் மூலம் கேர்ன் ஹில் வனப்பகுதியை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது